Sunday, September 27, 2015

அங்கோர் வாட் ஒரு ஆன்மீக அதிசயம்.




உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தலம் எது என்று தெரியுமா? கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் எனப்படும் ஒரு இந்து ஆலயமாகும்.

 கி.பி. 1ஆம்  நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டுவரையிலான ஒரு  காலகட்டத்தில் தென் கிழக்கு ஆசியா முழுவதும் இந்து மதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்திய கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். 
கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக்கி ஆளத் தொடங்கினான். அவன் பெயர் இரண்டாம் ஜெயவர்மன். கெமர் கலாச்சாரம் அவனிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கலாச்சாரம் அது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்ட கோயில்தான் அங்கோர் வாட். 




இது மிகப் பெரும் இந்துக் கோயில் மட்டும் அல்ல உலகின் மிகப் பெரிய கோயிலும்கூட. மொத்தம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக  மேற்குத் திசை நோக்கிய இக் கோயில் விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. கோவிலை சுற்றி 4 பக்கமும் 200 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்ட அகழி அமைக்கப்பட்டுள்ளது. 



அகழியை கடந்ததும் கோவிலை சுற்றி பிரமாண்ட மதில் சுவர் 1300 மீட்டர் நீளமும், 1500 மீட்டர் அகலமும் ஒரு கிலோ மீட்டர் சதுர பரப்பளவும் கொண்டது. இவ்வாலயத்தை மட்டும் சுற்றிப்பார்க்க குறைந்தது 3 மணி நேரம் ஆகும். மூன்று நிலைகளைக் கொண்ட உயர்ந்த கோபுரமும், அதனைச் சுற்றி அமைந்துள்ள நான்கு கோபுரங்களும் மேருமலையைக் குறிக்கிறது. அங்கோர்என்கிற சொல் நகர்என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. வாட்என்றால் கோயில். அங்கோர் வாட்என்பது நகரக் கோயில். 
வெளிப் பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயில் உயர்ந்த கட்டடமாக எழுப்பப்பட்டுள்ளது. கோயிலை மூன்று அடுக்குகளாகப் பார்க்க முடிகிறது. முதல் அடுக்கில் புடைத்த சுவர் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இரண்டாம் அடுக்கில் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இறங்கிக் குளிப்பதற்கேற்பப் படிகள் உள்ளன. புத்தர் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன. அங்கிருந்து இரண்டாம் அடுக்கிற்குச் செல்ல மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கு பெரிய தளப்பரப்புடையதாக அதற்கு மேலுள்ள மூன்றாம் அடுக்கிற்கான பிரகாரமாக அமைந்துள்ளது. மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.

ஆலயச் சுவர்களில் 'அப்சரஸ்எனும் தேவ மங்கையரின் விதவிதமான தோற்றாங்களைக் காணலாம்.

  
தேவதைகள் சிற்பங்கள் மட்டுமே 1796 உள்ளன. இந்த சிற்பங்கள் 30 சென்டி மீட்டர் உயரத்தில் இருந்து 110 சென்டி மீட்டர் உயரம் வரை பல்வேறு வடிவங்களில் உள்ளன.கீழ்நிலையின் சுற்றுச் சுவர்களில் குருக்ஷேத்திரப் போர், ராமாயணக் காட்சிகள், சொர்க்கம்
நரகம் பற்றிய விளக்கங்கள் மற்றும் தேவாசுரர் பாற்கடல் கடையும் காட்சியும், சூரியவர்மன் எதிரி நாடுகளுடன் போரிட்ட காட்சிகளும் மனம் கவரும் விதத்தில் காட்சியளிக்கின்றன. இதில் ராமாயண சிற்பக் காட்சிகள் மட்டுமே 600 மீட்டர் நீளத்துக்கு செல்கிறது. இவ்வளவு பெரிய சிற்பம் உலகில் எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 






                                                                அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்தப் பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன. பல ஆண்டுகள் காடுகளில் மறைந்து கிடந்து பல இடங்களில் சிதைந்திருந்தாலும், இன்றும் சில சிற்பங்கள் உயிரோவியமாகக் காட்சி தருகிறது. இவ்வாலயத்தில் மட்டுமே 8 கைகள் கூடிய 15 அடி உயர விஷ்ணு சிலை காணப்படுகிறது. 

அங்கோர் வாட் கோயிலை இரண்டாம் சூர்யவர்மன் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. எட்டாம் ஜெயவர்மன் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் அது நிறைவுசெய்யப்பட்டது. கோவிலை கட்ட 60 லட்சத்தில் இருந்து 1 கோடி வரையிலான பாறாங்கற்களை பயன்படுத்தி உள்ளனர். 














                                                              ஒவ்வொரு கல்லும் 1.5 டன் எடை கொண்டது. இந்த கற்களை 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலையில் இருந்து வெட்டி எடுத்து வந்துள்ளனர். அவற்றை தரை வழியாக கொண்டு வருவது கடினம் என்பதால் நீர்வழி பாதை அமைத்து மிதவை மூலம் கொண்டு வந்துள்ளனர். இதற்காக மலையில் இருந்து 35 கிலோமீட்டர் தூரம் கால்வாய் வெட்டி அருகில் உள்ள ஏரிக்கு பாதை அமைத்துள்ளனர். 

பின்னர் ஏரியில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து ஏரியின் இன்னொரு பக்கம் வந்துள்ளனர். அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரம் இன்னொரு கால்வாய் வெட்டி  பாதை அமைத்து கோவிலுக்கு பாறைகளை கொண்டுவந்துள்ளனர். இப்படி கிட்டத்தட்ட 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பாறைகளை படகுகள் வழியாக கொண்டு வந்து இருப்பது மிகப்பெரிய ஆச்சரியமாக கருதப்படுகிறது. 


அங்கோர்வாட் கோவில் கம்போடியவின் சின்னமாக தேசியக்கொடியில் இடம்பொஎற்றுள்ளது. 



ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாட்டிலிருந்தும் பெருமளவிலான சுற்றுல ப‌யணிகள் அங்கோர்வாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றனர்.கம்போடியாவின் முன்னேற்ற பாதையில் அங்கோர்வாட் கோயிலுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

1 comment:

  1. கம்போடியா கோயிலை பற்றி அறிந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன்

    ReplyDelete